சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்வதற்காக 3 ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் நிகழ்ச்சி அரங்கிற்கு வருகை தந்தனர். இந்நிகழ்ச்சியில் குல்லா மற்றும் வேட்டி அணிந்து விஜய் பங்கேற்றார்.
இதனிடையே அரங்கிற்கு வெளியே வெகு நேரமாக காத்திருந்தவர்கள், தடுப்புகளை தாண்டி அரங்கிற்குள் செல்ல முயன்றனர். அப்போது பவுன்சர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சி அரங்கிற்கு சென்ற விஜய், இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையில் கலந்துகொண்டார். இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஒரு நாள் முழுவதும் விஜய் நோன்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், கஞ்சி அருந்தி விஜய் நோன்பு திறந்தார்.
தொடந்து பேசிய விஜய், தன்னுடைய அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், நபிகள் நாயகத்தின் மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார். இதன் பின்னர் திறந்தவெளி வாகனத்தில் தவெக தலைவர் விஜய் ஊர்வலமாக சென்றார்.