மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது குறித்து மாஞ்சோலையை சேர்ந்த மக்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் மாஞ்சோலையில் இருந்து மாற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு தற்போது அரசு வழங்கி வரும் நிவாரணம் மற்றும் மறு வாழ்வு நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றும், எனவே கூடுதல் நிவாரணம் மற்றும் உரிய மறுவாழ்வு திட்டங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்கள் மாஞ்சோலையை காலி செய்துவிட்டு அங்கு குடியேறலாம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசு தரப்பில் சுற்றுச்சூழல் தொடர்பாக சில ஆவணங்களையும், குறிப்புகளையும் தாக்கல் செய்யவுள்ளதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.