இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் ஜெகதீஸ்வரி சசிதரனின் சவால்கள் மிக்க வாழ்க்கைப் பயணத்தை சிறு செய்தித் தொகுப்பாக பார்க்கலாம்.
1990 களில் இலங்கையில் நடைபெற்ற போரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கானோர்களில் ஒருவர் தான் இந்த ஜெகதீஸ்வரி சசிதரன். 7 மாத குழந்தையாக தமிழகத்திற்கு வந்த ஜெகதீஸ்வரி, தற்போது நாட்டியத்தில் சாதிக்கத் துடிக்கும் ஏராளமான மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்கிறார்.
நடனம் மீது சிறுவயது முதலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜெகதீஸ்வரி, சினிமாத்துறைக்குள் கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடனக் கலையை தீவிரமாக பயிலத் தொடங்கினார். நடனத்திலிருந்த ஆர்வம் படிப்படியாக பரதநாட்டியத்தின் பக்கம் திரும்பியது. இலங்கையைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பரதநாட்டியத்தை கற்க பல்வேறு சவால்களை எதிர்கொண்ட ஜெகதீஸ்வரி, பின்னாளில் அதில் தனித்துவமிக்கவராகவும் திகழத் தொடங்கினார்.
மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் இசைக்கல்லூரியில் சேர்ந்த ஜெகதீஸ்வரி, பரதக் கலையை பயின்றி சிறந்த மாணவியாக தேர்ச்சி பெற்றதோடு, பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் பரத நாட்டியத்தை ஆடி, தனது நடன அசைவால் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பிய ஜெகதீஸ்வரி, தற்போது தவிர்க்க முடியாத பரதநாட்டிய கலைஞராக திகழ்ந்து வருகிறார்.
பரதக் கலையை கற்க தான் சந்தித்த இடையூறுகளை பிறர் சந்தித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த ஜெகதீஸ்வரி, ஏற்றத்தாழ்வின்றி ஏழை மாணவர்கள் பலருக்கு தான் கற்ற பரதக் கலையை பயிற்றுவித்து வருகிறார்.
ஜெகதீஸ்வரி சசிதரனின் கலைத்திறனை பாராட்டி நூற்றுக்கணக்கான விருதுகள் பல்வேறு சமூக அமைப்புகளின் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கடினமான நடன அசைவுகளை மிக எளிதாக பயிற்றுவிக்கும் ஜெகதீஸ்வரியால் பல நடன ஆசிரியர்கள் உருவாகியுள்ளனர்.
இலங்கையிலிருந்து வந்த அகதி என்ற பிம்பத்தை தகர்த்தெறிந்து, பல்வேறு சவால்களை துணிச்சலுடன் எதிர்கொண்டால் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறார் பரத நடன ஆசிரியை ஜெகதீஸ்வரி சசிதரன்.