விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஃபெட்ரிஷியா மேரி. சவால்களும், சோதனைகளும் நிறைந்த மேரியின் பயணித்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் தான் ஃபெட்ரிஷியா மேரி. தையல் கலை நிபுணரான மேரி, கணவரின் எதிர்பாராத மரணத்தால், அவர் விட்டுச் சென்ற முடிதிருத்தும் தொழில் இறங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக, இந்த சலூன் கடையை நடத்தி வரும் மேரி, பெண்கள் எந்த தொழிலும் சாதிக்கலாம் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
முடி திருத்தும் தொழிலுக்கு மேரி வந்த புதிதில் கடைக்கு வரும் ஆண்களில் பலர், தன்னை பார்த்ததும் திரும்பிச் சென்றதாகவும், பின்னர் குழந்தைகள் தொடங்கி படிப்படியாக அனைவருக்கும் சிகை அலங்காரம் செய்வதாகவும் மேரி குறிப்பிட்டார். பெண் என்ற ஒரே காரணத்திற்காக முடிதிருத்தும் தொழிலில் ஈடுபட பல்வேறு தடைகளும் எதிர்ப்புகளும் நீடித்ததாகவும், அதனை கடந்தே இந்த தொழிலில் சாதித்ததாகவும் கூறுகிறார் மேரி….
சர்வதேச அளவில் பெண்களை போற்றிக் கொண்டாடப்படும் இந்நாளில், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த துறையிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக திகழும் ஃபெட்ரிஷியா மேரி அனைவரின் பாராட்டுக்குரியவராக திகழ்கிறார்.