2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கேக் வெட்டி, மகளிர் அணியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் பெண்களுக்கென பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் பெண்களின் பேராதரவுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் அதிமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக-வுடனான கூட்டணி குறித்த கேள்விக்கு, அதிமுக பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் எனவும், தேர்தல் நேரத்தில் ஆலோசனை நடத்தி கூட்டணி குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் பதிலளித்தார்.