நாகையில் பெண்களைத் தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெக-வினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த 26 பேருக்கு வழங்கப்பட இருந்த இலவச வீட்டுமனை பட்டா நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கருங்கண்ணி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ரவிச்சந்திரன், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புகார் கொடுத்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த 4 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து மேலப்பிடாகை பகுதியில் தவெக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு போட்டியாக திமுகவினரும் எதிர்கோஷம் எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தவெகவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அப்போது பேசிய தவெக பெண் நிர்வாகிகள், குற்றவாளிகளுக்கு போலீசார் துணைபோவதாகவும், இதனால் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாகவும் வேதனை தெரிவித்தனர்.