சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இளம் ராணுவ வீரர்கள் 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அந்த உணர்ச்சிமிகு நிகழ்வு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உலகில் உள்ள ராணுவ பயிற்சி மையங்களில் 2-வது கடுமையான பயிற்சி மையம் என்றால், அது சென்னை தாம்பரத்தில் உள்ள Officers Training Academy தான். சுமார் 80 ஆண்டுகள் பழமையான இந்த அகாடமியில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கான அதிகாரிகள் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 11 மாதங்களாக கடுமையான மற்றும் சவாலான பயிற்சி மேற்கொண்ட இளம் இந்திய ராணுவ வீரர்கள் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்கும் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ முப்படை பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ முன்னிலையில் 169 பேர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் 34 பெண்கள் மற்றும் 12 நட்பு நாடுகளை சேர்ந்த இளம் அதிகாரிகளும் அடங்குவர்.
முன்னதாக பாரம்பரிய முறையிலான பாசிங் அவுட் செரிமணி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மிடுக்கான தோற்றத்துடன் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் புதிய அதிகாரிகள் அணிவகுப்பை அரங்கேற்றினர்.
பாரம்பரியமான அணிவகுப்பை தொடர்ந்து இளம் அதிகாரிகள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் பதவியேற்பு மற்றும் உறுதிமொழிக்கான முக்கிய தருணத்தில் அனைவரும் ஒருங்கிணைந்தனர். பிள்ளைகள் ராணுவ அதிகாரிகளாக வேண்டும் என பலநாள் கனவு கண்ட பெற்றோர்கள் கைகளால், தங்களது தோள்பட்டையில் கருப்பு துணிகளால் மூடியிருக்கும் அதிகாரப்பூர்வ நட்சத்திரங்களை திறந்து வைக்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.
பதவியேற்புக்கான முத்திரைகளை தோள்களில் பதித்தவாறு உறுதி மொழியேற்றுக் கொண்ட இளம் லெப்டினன்ட் அதிகாரிகளுக்கு, பயிற்சி வழங்கிய மூத்த அதிகாரிகள் முதல் சல்யூட் அடித்து கௌரவப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து தங்களின் மூத்த அதிகாரிகளுக்கு இளம் லெப்டினன்ட் அதிகாரிகள் முதல் சல்யூட்டை சமர்ப்பணம் செய்தனர்,
தொடர்ந்து தாம்பரம் OTA கமாண்டன்ட் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் AJ பெர்னாண்டஸ் உடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி புஷ் அப்ஸ் எடுத்து தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக இந்திய ராணுவத்தின் பாடலை அனைவரும் கம்பீரமாக பாட, மூவர்ண கொடியுடன் கூடிய பலூன்களை பறக்கவிட்டு இளம் வீரர்கள் நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். கொடிகளை பறக்க விட்ட பின்னர் உற்சாகத்தில் ஆழ்ந்த இளம் லெப்டினன்ட் அதிகாரிகள், ஒருவரை ஒருவர் தூக்கியும் கட்டியணைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தனது 3-வது முயற்சியில் மெரிட் வாய்ப்பு கிடைத்து லெப்டினன்ட் அதிகாரியாக உருவெடுத்துள்ள செளமியா, பெண்கள் தயக்கத்தை தவிர்த்து தைரியமாக செயலாற்ற வேண்டும் என கூறினார்.
நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கௌரவமான மற்றும் கடினமான ராணுவ பணிகளில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இளம் அதிகாரிகள் நாளைய பாரதத்தின் பாதுகாப்பு அரண்களாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.