ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 251 ரன்கள் எடுத்தது.
அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக டேரல் மிச்சல் 63 ரன்களும், மைக்கல் பிரேஸ்வெல் 53 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர், 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 31 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த கோலி ஒரு ரன்னுக்கு அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சிஅளித்தார். நிதானமாக விளையாடிய ரோகித் சர்மா 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார்.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களிலும், அக்சர் பட்டேல் 29 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் இந்திய அணி 49 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து கோப்பையைக் கைப்பற்றியது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வி அடையாமல் கோப்பை வென்ற இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா, இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மைதானத்தில் வெற்றியைக் கொண்டாடிய விராட் கோலி – ரோஹித் சர்மா, ஸ்ட்ம்ப்பை வைத்து தாண்டியா ஆட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக Runner Up பட்டத்தை வென்றது.