உக்ரைனுக்கு அளித்து வந்த அனைத்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்திவிட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களைக் கடந்த சில நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பை தடுக்கவும், போரை நிறுத்தவும் 4 அம்ச திட்டத்தை பிரிட்டன் முன்மொழிந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்ற ட்ரம்ப், ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கைளை மேற்கொண்டார். போர் நிறுத்தத்துக்கு உடன்பட வேண்டும் என்றும், உக்ரைனின் கனிம வளத்தை வெட்டியெடுக்கும் உரிமையை கால வரையறை இல்லாமல் வழங்க வேண்டும் என்றும் உக்ரைனிடம் அமெரிக்கா வலியுறுத்தியது.
பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத நிலையில், அமெரிக்காவுடனான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்து விட்டார். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்காகக் கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தார். எதிர்பாராத விதமாக பேச்சுவார்த்தை காரசாரமானது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை அவமானப்படுத்தி, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றிய நிலையில், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளையும் நிதி உதவிகளையும் அதிபர் ட்ரம்ப் நிறுத்தினார். ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து முதல்முறையாக உக்ரைனின் இராணுவம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் இதுவாகும். உக்ரைனுடன் இராணுவ உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதையும் அதிபர் ட்ரம்ப் தடை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனால், ரஷ்ய தாக்குதலை முறியடிக்கவும், ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்தவும் இனி உக்ரைனால் முடியாமல் போகும். அமெரிக்காவின் HIMARS மற்றும் பிரிட்டனின் Storm Shadows ஏவுகணைகளை இனி உக்ரைன் பயன்படுத்த முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரமாக்கி உள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். உக்ரைனுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவதை தடுக்க உக்ரைனுக்கு கடன் வழங்குவதற்கு ஏற்ப விதிகளை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக செயல்பட வேண்டும் என்று கூறிய பிரிட்டன் பிரதமர், இதற்காக பிரான்ஸ் அதிபருடன் சேர்ந்து தயாரித்த நான்கு அம்ச திட்டம் ஒன்றையும் முன் மொழிந்துள்ளார். இந்த திட்டத்தின் இறுதி வடிவம் அமெரிக்க அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி, அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளின் வீரர்களைக் கொண்ட, 30,000 துருப்புக்களுடன் ஒரு அமைதி படை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த அமைதி படை உக்ரைனின் நகரங்கள், துறைமுகங்கள், அணு மின் நிலையங்கள் போன்ற முக்கியமான பகுதிகளில் நிலைநிறுத்தப்படும். உக்ரைனின் வான்வெளியில் மீண்டும் வணிக விமானங்களை இயக்குவதற்கு உதவியாக இந்த அமைதி படை செயல்படும். வணிகக் கப்பல் பாதையில் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை கண்காணிக்கவும் தடுக்கவும், கருங்கடலில் ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்படும்.
நேட்டோவில் உள்ள ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா நேரிடையாக தாக்கக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, உக்ரைனின் கிழக்குப் பகுதிக்கு அமைதி படை அனுப்புவதை இந்த புதிய திட்டத்தில் சேர்க்கவில்லை. அதற்கு பதிலாக, கிழக்கு உக்ரைனில் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைத் தொடர்ந்து வைத்திருக்குமாறு பிரிட்டனும் பிரான்சும் அமெரிக்காவை வலியுறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் முன்மொழிந்த அமைதி படைக்கு, தங்கள் இராணுவ வீரர்களை அனுப்ப 20 ஐரோப்பிய மற்றும் பிரிட்டன் காமன்வெல்த் நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியா, அயர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், துருக்கி ஆகிய நாடுகளும் அமைதி படையில் சேரத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளன. கனடா, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இந்தப் படையில் சேருவதை நிராகரிக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகளின் அமைதி படை திட்டம், ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ உறுப்பு நாடுகளின் நேரடி ஈடுபாட்டைக் குறிப்பதாகவும் அதை அனுமதிக்க முடியாது என்றும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Sergey Lavrov கடுமையாக கண்டித்துள்ளார்.