ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு மத்திய அரசு
தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவில் வரும் 22-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களைக் கூட அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளதாகவும், மக்கள் நலன் கருதி மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
விளையாட்டுகள் மீதான இளைஞர்களின் பேரார்வத்தை புகையிலை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை திணிப்பதற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. இதைத் தடுக்கும் புகையிலைப் பொருட்களின் விளம்பரம், ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புரவலர் செயல்பாடுகள் ஆகியவற்றை முழுமையாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதே கருத்தை மத்திய அரசும் வலியுறுத்தியிருப்பது பாமகவின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஆணையை ஐ.பி.எல். அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும், சென்னை உள்பட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐ.பி.எல் அமைப்பு தடை செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.