திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஜவுளி மண்டலத்தை அறிவிக்க வேண்டும் என பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பனியன் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய அளவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்குவதோடு, அந்நிய செலாவாணியை அதிகளவு ஈட்டித்தரும் தொழிலாளாக பனியன் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொழில் விளங்குகிறது. அந்த பனியன் தொழிலின் மையப்புள்ளியாக விளங்கும் திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழகம் மட்டுமல்லாது பீகார், ஒடிஷா, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் என பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இந்த பனியன் தொழில் விளங்கி வருகிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனியன் தொழில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.
பன்மடங்கு உயர்த்தப்பட்ட மிண் கட்டணமும், சொத்துவரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியதோடு, பல தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.
வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக நிதிநிலை அறிக்கையில், நலிவடைந்திருக்கும் பனியன் தொழிலை மீட்டெடுக்கும் வகையில் மின்கட்டணம் மற்றும் வரிகளை குறைப்பது தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எத்தனையோ சிரமங்களை சந்தித்தாலும் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலான பொருளாதாரத்தையும் உயர்த்த பெரும் பங்களிப்பை வழங்கி வரும் பனியன் தொழிலை மேம்படுத்தவும், அதனை மட்டுமே நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் மூலதன மானியம் 45 சதவிகிதமாக உயர்த்துவதோடு, தொழிலாளர்கள் தங்கும் விடுதியுடன் கூடிய நிறுவனங்களுக்கான மானியத்தையும் அதிகப்படுத்தினால் பனியன் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள சுமை குறையும் என தொழில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பனியன் தொழிலே பிரதானமாக இருப்பதை கருத்தில் கொண்டு திருப்பூரை மையமாகக் கொண்டு ஜவுளி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திமுக அரசின் நடப்பு ஆட்சிக்காலத்திற்கான இறுதி முழு பட்ஜெட் என்பதால் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதிகளவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திருப்பூர் ஜவுளி மண்டல அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.