தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்திற்கான மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் ஒட்டுமொத்த திமுக அரசையும் உலுக்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் மதுபான ஊழல் குறித்தும், அமலாக்கத்துறையின் விசாரணை குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் வசமுள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனம், பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்து மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை வழங்கும் மதுபான ஆலைகள் பெரும்பாலும் திமுகவினர் மற்றும் ஆதரவாளர்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.
மதுபான ஆலைகளில் இருந்து மதுபானக் கிடங்குகளுக்கு செல்லாமல் நேரடியாக மதுபானக் கடைகளுக்கே மதுபானங்களை கொண்டு சென்றதில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கான கலால் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடர்பான புகாரில் இருந்த முகாந்திரத்தின் படி அமலாக்கத்துறை சோதனையில் இறங்கியது.
டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மதுபானம் கொள்முதல் செய்யப்படும் ஆலைகளின் தலைமை அலுவலகங்கள், மதுபான ஆலைகளின் அதிபர்களுக்கு சொந்தமான இடங்கள், டாஸ்மாக் முன்னாள் அதிகாரிகளின் வீடு என சென்னை, கரூர் உள்ளிட்ட 25க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மூன்று நாட்கள் நீடித்த சோதனையில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் திமுக எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாக கருதப்படும் அக்கார்டு டிஸ்லரிஸ் மது ஆலை அலுவலகத்தில் கட்டுக்கட்டாக முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டிருப்பதாகும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் திமுக மேலிடத்திற்கு நெருக்கமானவராக அறியப்படும் எஸ் என் ஜெயமுருகனின் எஸ் என் ஜே மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகத்திலிருந்தும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் கலால் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கும் நிலையில் விசாரணையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் மதுபானக் கொள்கையில் நடைபெற்ற ஊழலில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்த நிலையில், சத்தீஸ்கரிலும் மதுபான ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் மதுபான ஊழல் நடைபெற்றிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருட்களின் தாராளப்புழக்கம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கால் தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை சந்தித்து வரும் திமுக அரசு மீதான மதுபான ஊழல் முறைகேடு உறுதி செய்யப்பட்டால், டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.