தனியார் கட்டுமான நிறுவனத்தின் வசதிக்காக குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்த சென்னையை அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் ஊராட்சி நிர்வாகம் குறித்தும், பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்தும் சற்று விரிவாக பார்க்கலாம்.
சென்னை விமானநிலையத்திற்கு பின்புறமாக அமைந்திருக்கக் கூடிய பொழிச்சலூர் ஊராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஊராட்சிகளில் ஒன்றான பொழிச்சலூர் ஊராட்சியில், காசா கிராண்ட் எனும் தனியார் கட்டுமான நிறுவனம் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியை தொடங்கியுள்ளது.
கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கால், குடியிருப்புகளின் விற்பனை பாதிக்கப்படும் எனக்கருதி, அந்த குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யுமாறு ஊராட்சித் தலைவர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.
காசா கிராண்ட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி நிர்வாகமும், ராஜேஸ்வரி நகர் பகுதியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பின்புறம் உள்ள நீர்நிலைப் பகுதியில் அந்த குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. நீர்நிலைகள் அடங்கிய பகுதியில் மரங்களை அகற்றி குப்பைக் கிடங்கு அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ராஜேஸ்வரி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அதற்கு அருகே குப்பைக் கிடங்கை அமைப்பது நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பத்தாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளுக்கு மத்தியில் அமையவிருக்கும் இந்த குப்பைக் கிடங்கால் நிலத்தடி நீர் மாசுபடும் என்கிறார் 7 வது வார்டு உறுப்பினர் ஷர்மிளா கிருஷ்ண மூர்த்தி
கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து தனியார் நிறுவனம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்குவது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அமையவிருக்கும் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் ஒன்று கூடி போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசு நிர்வாகமே தனியார் நிறுவனத்தின் பக்கம் நின்றிருப்பது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.