தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ஆலை குழுமத்தின் தலைமை அலுவலகம், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அதேபோல் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் நடைபெற்ற சோதனையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.
மேலும் சோதனையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு கலால் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அனுப்பப்பட வேண்டிய மது பாட்டில்கள் ஆலைகளில் இருந்து நேரடியாக கடைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அமலாக்கத்துறையின் சோதனை ஊழலுக்கான முகாந்திரம் இல்லாமல் நடத்த வாய்ப்பில்லை என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்குள் நடைபெற்ற சோதனை குறித்து தமிழக அரசு மவுனம் காக்கும் நிலையில், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களை தொடர்ந்து தமிழக அரசியல் களத்தையும் புரட்டிப் போடும் அளவுக்கு டாஸ்மாக் மெகா ஊழல் நடந்துள்ளதாகவும் அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டிருப்பது வெட்கக் கேடு என அதிமுக விமர்சித்துள்ளது.
முன்னதாக ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடைபெறுவதாக ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் புகாரளித்திருந்தார்.
மேலும், மதுபான ஊழல் முறைகேடு புகார் மீது விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், ஊழல் புகாரை மறைக்கவே மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு என திமுக அரசு நாடகமாடுவதாக விமர்சித்துள்ளன.
மேலும் மதுபான ஊழல் புகாரால் டெல்லி, சத்தீஸ்கரில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.