கிண்டர் கார்டன் செல்லும் குழந்தை உலக செஸ் கூட்டமைப்பின் அதிகாரப்புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் அத்தகைய சாதனை படைத்த சதுரங்க உலகின் குட்டி தாதா ஒருவரை பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
சதுரங்க உலக சாம்ராஜ்யத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி வீரர்களின் ஆதிக்கமே தொடர்கிறது. இந்திய கிராண்ட்மாஸ்டர்களை எதிர்கொள்வதே உலக கிராண்ட் மாஸ்டர்கள் மிகப்பெரிய சவாலாக கருதுகின்றனர்.
விஸ்வநாதன் ஆனந்த் விதைத்த விதைகள் இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கின்றன. பிரக்ஞானந்தா, குகேஷ், ,வைசாலி என இளம் வயதிலேயே செஸ் உலகின் உச்சத்தை எட்டியதன் தொடர்ச்சியதாக கொல்கத்தாவின் 4 வயது இளம் வீரர் அனீஷும் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
சதுரங்க உலகின் குட்டி தாதா என சொல்லும் அளவிற்கு உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பியிருக்கும் அனீஷ், FIDE வின் அதிகாரப்பூர்வ போட்டிகளில் பங்கேற்று ரேட்டிங்கையும் பெற்று சாதனை படைத்துள்ளார். பிரக்ஞானந்தா, குகேஷ் வரிசையில் சிறிய வயதிலேயே FIDE ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற இளம் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் அனீஷ்
கிண்டர் கார்டன் பள்ளியில் பயிலும் அனீஷ் வாரத்தில் நான்கு நாட்கள் சுமார் 8 மணி நேரம் சதுரங்க பயிற்சியில் ஈடுபடுகிறார். 10 வயது சிறுவர்கள் கூட ஒரு இடத்தில் அமர்ந்து சொல்வதை கேட்காமல் சுட்டித் தனம் செய்யும் போது, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து அனீஷ் கிளாசிக்கல் செஸ் போட்டிகளை ஆடி வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆசிரியரின் மகனாக இருக்கும் அனீஷ், 4 வயதிலேயே அதீத திறன் கொண்டவராக திகழ்கிறார். செஸ் உலகின் ஜாம்பவான்களான மேக்னஸ் கார்ல்சன், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் மட்டுமல்லாது பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்கிறார் இந்த குட்டி தாதா.
பிறந்த நான்கு வருடங்களுக்குள் FIDE ரேட்டிங் பெற்றுள்ள அனீஷ், அடுத்த சில ஆண்டுகளில் அதே FIDE ரேட்டிங்கில் புதிய உச்சத்தை அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறனர் சதுரங்க உலகின் தலைசிறந்த வல்லுநர்கள்