தலைவாசல் அருகே நிலத்தை அபகரித்து, கணவரை கடத்திய திமுகவினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி அலுவலகத்தில் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஹேமலதா – ராஜேந்திரன் தம்பதிக்கு சொந்தமான 90 சென்ட் நிலத்தை திமுகவைச் சேர்ந்த ஆறுமுகம், சக்கரவர்த்தி ஆகியோர் ஏமாற்றி அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 30ஆம் தேதி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை திமுக பிரமுகர்கள் களைக்கொல்லி மருந்து அடித்து, பாதையை மண் கொட்டி அடைத்ததாக ஹேமலதா வேதனை தெரிவித்துள்ளார்.
திமுகவினருக்கு ஆதரவாக செயல்படும் ஆத்தூர் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்களுக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நில அபகரிப்பு தொடர்பாக காவல்நிலையத்தில் பலமுறை மனு அளித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், திமுகவினர் கடத்தி வைத்துள்ள தனது கணவரை மீட்டுதர எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.