சென்னை, ஓஎம்ஆர் சாலையில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்த கும்பல் அங்கு பணியில் இருந்தவர்களிடம் ரகளையில் ஈடுபட்டனர்.
காரப்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றிக்கொண்டிருந்த போது வெள்ளை நிற சட்டை அணிந்தபடி வந்த 50-க்கும் மேற்பட்டோர் ஊழியர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
ஜிஆர்கே ரெட்டி என்பவற்கு சொந்தமான இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சுசில் லால்வனி என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. சுசில் லால்வனி பேசிய தொகையை தராமல் 60 கோடி ரூபாய் பணம் செலுத்த வேண்டிய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நிறுவனத்திற்குள் மிரட்டல் விடுத்த கும்பலுக்கும், சொத்து விற்பனைக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.