டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளாதக செய்திகள் வருவதாக தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் பெருங்கடலின் ஒரு துளிதான் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியானதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஊழல் செய்யப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் சிறு பகுதி மட்டும் தான் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சென்றிருப்பதாகவும், மீதமுள்ள பணம் யாருக்கு சென்றது என விசாரித்து வருவதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மது வகைகளில் 50 விழுக்காட்டுக்கு மேல் கலால் வரியும், விற்பனை வரியும் செலுத்தப்படுவதில்லை என்பதை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனே பேட்டி ஒன்றில் கூறியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக 4,829 மதுக்கடைகளும், சட்டவிரோதமாக 20 ஆயிரத்திற்கும் கூடுதலான சந்துக் கடைகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அன்புமணி, பொய்வழக்கு போடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் வாயிலாக சந்துக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதையே திராவிட மாடல் அரசு வாடிக்கையாக வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார் என சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.