மொரிஷியஸிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மொரிஷியஸுக்கு இந்தியா ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறது ? மொரிஷியஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த இந்தியா எவ்வாறு எல்லாம் உதவுகிறது என்பது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
மொரீஷியஸ், மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கியமான தீவு தேசமாகும். இந்த தீவின் மொத்த மக்கள் தொகை 1.2 மில்லியன். இதில், சுமார் 70 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அவர்களில் பாதி பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையே ஒரு தனித்துவமான தொடர்பை, பிணைப்பை எடுத்துக்காட்டுகிறது.
1948ம் ஆண்டு, சுதந்திர இந்தியா, ராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்திய முதல் சில நாடுகளில் மொரீஷியஸும் ஒன்றாகும். சுவாரஸ்யமாக, மொரீஷியஸின் தேசிய தினமான மார்ச் 12ம் தேதியும் இந்திய தொடர்பையே காட்டுகிறது. 1901ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் வழியில், மகாத்மா காந்தி, மொரீஷியஸில் தங்கியிருந்தார்.
மொரீஷியஸில் இருந்த இந்திய தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி, மூன்று உறுதிமொழிகளைப் பின்பற்ற வலியுறுத்தினார். அவை, கல்வி, அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் இந்தியாவுடனான உறவுகளைப் பேணுதல் என்பவையாகும். இன்றும்,மொரீஷியஸ், மகாத்மாவுக்கு கொடுத்த உறுதி மொழிகளைப் பின்பற்றி வருகிறது. எனவேதான் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மொரிஷியஸ் தனது தேசிய தினத்தை தண்டி யாத்திரை நாளில் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டுக்கான மொரீஷியஸிஸ் தேசிய தினத்தின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியாவுக்கு, மொரிஷியஸ் ஒரு கூட்டணி நாடு மட்டுமல்ல. இந்தியா என்ற குடும்பத்தின் ஒரு அங்கம் என்றும், மொரிஷியஸ் இந்தியாவை பரந்த உலகளாவிய தெற்கோடு இணைக்கும் ஒரு பாலமாகும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், முதலீடு, உள்கட்டமைப்பு, வர்த்தகம், பாதுகாப்பு நெருக்கடி என எதுவாக இருந்தாலும், இந்தியா எப்போதும் மொரிஷியஸுடன் நிற்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி மொரிஷியஸ் நாட்டுக்குச் செல்வது இது இரண்டாவது முறையாகும். 2015 ஆம் ஆண்டில்,பிரதமர் மோடியின் மொரிஷியஸ் பயணத்தின் விளைவாக, அகலேகா தீவில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. மேலும், மொரீஸியசின் மிக உயர்ந்த விருது வழங்கப்பட்டது.
கடல் மற்றும் வான் இணைப்பை மேம்படுத்துவதையும், பாதுகாப்புப் படைகளின் திறன்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த ஒப்பந்தம், மக்கள் பயன்பாட்டுக்காகவும் உருவாக்கப்பட்டதாகும். மொரிஷியஸ் தேசிய கடலோர காவல்படைக்காக, இந்தியா கட்டமைத்த போர்க்கப்பலான ( MCGS Barracuda ) MCGS பராகுடா வழங்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டில், மொரிஷியஸ் கடலோர காவல்படை சேவை, இந்திய கப்பல் கட்டும் நிறுவனமான கோவா ஷிப்யார்ட்ஸ் லிமிடெட்டிடமிருந்து, 14.5 மீட்டர் நீளமுள்ள பத்து வேக இடைமறிப்பு படகுகளை (FIBs) வாங்கியது. 2017ம் ஆண்டில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட CGS Valiant என்ற இரண்டு நீர் ஜெட் வேக ரோந்து கப்பல்கள் மொரிஷியஸ் கடலோர காவல்படையில் இணைக்கப் பட்டது.
அகலேகா தீவு, மொரிஷியஸுக்கு வடக்கே 1,100 கிலோமீட்டர் தொலைவில், இந்திய தெற்கு கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. சட்ட விரோத மீன் பிடித்தல்,கடற்கொள்ளை, பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமாக இத்தீவு இருந்து வந்தது.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், இத்தீவில், புதிய விமான ஓடுபாதை மற்றும் படகுத் தளத்தை,பிரதமர் மோடியும், அப்போதைய மொரீஷியஸ் பிரதமர் ஜக்னாத்தும் இணைந்து திறந்து வைத்தனர். மொரீஷியஸின் 2.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை கண்காணிக்கவும் இந்த ஒத்துழைப்பு உதவுகிறது. இதனால், மொரீஷியஸின் கடல்சார் பாதுகாப்பு மேம்படுத்தப் பட்டுள்ளது.
மொரிஷியஸின் தேசிய கடலோர காவல்படைக்கு, உள் உபகரணங்களுடன் C-139 என்ற இடைமறிப்பு படகுகள், வழங்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளால் ஏற்படுத்தப் பட்ட, கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் மொரிஷியஸும் இணைந்தது.
2021ம் ஆண்டு, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CECPA) இந்தியாவும், மொரிஷியஸும் கையெழுத்திட்டன. ஒரு ஆப்பிரிக்க நாட்டுடன் இந்தியா கையெழுத்திட்ட முதல் வர்த்தக ஒப்பந்தமாகும்.
நீண்ட காலமாகவே, இந்தியாவுடன் நெருக்கமான வர்த்தக உறவை மொரிஷியஸ் கொண்டுள்ளது. மொரிஷியஸுக்கு இந்தியா 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது.
இந்தியாவும் மொரீஷியஸும் விண்வெளி ஆராய்ச்சியில் இணைந்து பணியாற்றுகின்றன. இதற்காக, விண்வெளி ஒத்துழைப்பு குறித்த நீண்டகால ஒப்பந்தத்தைக் இருநாடுகளும் ஏற்படுத்தியுள்ளன. 2023 ஆம் ஆண்டு, நவம்பரில், கூட்டு செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
புவிசார் அரசியல் போட்டிக்கான ஒரு இடமாக இந்தியப் பெருங்கடல் மண்டலம் மாறியுள்ளது. பல்வேறு நாடுகள் இந்திய பெருங்கடலில் தம் ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்கின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகியவை இந்திய பெருங்கடலில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகின்றன.
சமீப காலமாக, இந்தியப் பெருங்கடல் மணடலத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. சீனாவின் செல்வாக்கை சமாளிக்க, மொரீஷியஸுடன் இணக்கமாக பணியாற்றுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மொரீஷியஸில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியா உதவி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை இந்தியா மொரீஷியஸுக்கு வழங்கியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய், வகாஷியோ எண்ணெய் கசிவு நெருக்கடி மற்றும் சிடோ சூறாவளி உள்ளிட்ட நெருக்கடி காலங்களில் முதல் ஆளாக, மொரீஷியஸுக்கு இந்தியா கை கொடுத்துள்ளது.
உலகளாவிய தெற்கை இந்தியா முன்னின்று நடத்தும் என்று சொன்னதற்கு ஏற்ப, பிரதமர் மோடி, இந்தியபெருங்கடல் மண்டலத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் என்றே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.