ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழிக்க வைத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவர் தேவேந்திரராஜ் என்பவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக 2 இளம் சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
எஸ்சி எஸ்டி ஆணையம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சாதிய பாகுபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, படிக்கும்போது குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது குறித்தும், பள்ளி வளாகத்தில் சாதி குறித்து மாணவர்கள் எந்த கருத்தும் பேசக்கூடாது எனவும் இருவரும் எடுத்துரைத்தனர்.
இதனை தொடர்ந்து, மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.