ஜார்க்கண்டில் ஹோலி பண்டிகை கொண்டாட்ட ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். கோத்தம்பா பகுதியில் சென்றபோது தங்கள் பகுதி வழியாக ஹோலி ஊர்வலம் செல்லக் கூடாது எனக்கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால், இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஒருவரைவொருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியதுடன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்துள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக காவல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹோலி கொண்டாட்டத்தின்போது சமூக விரோதிகள் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்ததாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.