தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனை சாத்தியமானது எப்படி? என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஹைதராபாத்திலிருந்து சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில், அனுமக்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமே ( Kummarigudem ) கும்மாரிகுடேம் கிராமம் ஆகும்.
இந்தக் கிராமத்தில் பெரும்பாலும் விவசாயிகளே வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தையே செய்து வந்தனர். பல விவசாயிகள் எருமைகள் வைத்திருந்தனர். ஒரு மாதத்துக்கு 3,000 ரூபாய்க்கும் குறைவாகவே வருவாய் ஈட்டி வந்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன் பாரம்பரிய விவசாயத்தை நம்பியிருந்த காரணத்தால், இவர்களால், மிகக் குறைந்த வருமானத்தையே ஈட்ட முடிந்தது. அதிக வட்டிக்குச் சிறு சிறு நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களைக் கூட திருப்பிச் செலுத்த முடியாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை இக்கிராமத்தில் பலர் வழக்கமாக கொண்டிருந்தனர். பிறகு, இயற்கை விவசாயத்துக்கு மாறி,பெற்ற கடனுக்கு வட்டி செலுத்தும் அளவுக்கு தங்கள் வருமானத்தை அதிகப் படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தரும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவருமான மோனிகா ரெட்டரிங், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவ முன்வந்தார்.
முதல் கட்டமாக, இக்கிராமத்தில் உள்ள 30 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, ஓவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பசு மாட்டை வழங்கினார். குஜராத்தில் இருந்து 30 ‘கிரி’ இன பசுக்களை நன்கொடையாக பெற்ற குடும்பங்கள், பால் விற்பனை மூலம் வருமானத்தை ஈட்டத் தொடங்கினார்கள்.
அடுத்த கட்டமாக, பால் சேகரிப்பு மற்றும் நெய் தயாரிக்கும் இயந்திரங்களை இக்கிராம விவசாயிகளுக்கு மோனிகா ரெட்டரிங் வழங்கினார். தற்போது, இந்த கிராமத்தில், 70 குடும்பங்களில் கிட்டத்தட்ட 200 பசுக்கள் உள்ளன. ஒரு மாதத்துக்கு 1,500 லிட்டர் பால் மற்றும் 50 லிட்டர் நெய்யை உற்பத்தி செய்கிறார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு இங்கிருந்து நெய் ஏற்றுமதியாகின்றன. மீதமுள்ள நெய் ஹனுமகொண்டா, வாரங்கல் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களுக்கு விற்கப்படுகிறது.
குறிப்பாக, ஒரு லிட்டர் பால் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில், ஒரு கிலோ சுத்தமான நெய் 4,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய பிற நெய் பிராண்டுகளின் சராசரி விலையை விட குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
நெய்யால், கிராமத்தின் முகமே மாறியுள்ளது. நெய், இக்கிராம மக்கள் அனைவரையும் கடன் பிடியில் இருந்து மீட்டுள்ளது. பசுக்களை வளர்க்கத் தொடங்கிய பிறகு, குடும்பத்தின் மாத வருமானம், 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. எந்தக் கடனும் இல்லாமல் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும், கிராமமே செழிப்பாக இருப்பதாகவும் கிராம மக்கள் மகிழ்ச்சியோடு சொல்கிறார்கள்.
கும்மாரிகுடேம் கிராம மக்களால், “மேடம்” என்று அன்பாக அழைக்கப்படும் மோனிகா ரெட்டரிங்,கிராம மக்களின் மனநிறைவைப் பார்த்து, மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
இயற்கை விவசாயத்திலும், பசும்பாலில் இருந்து தரமான தயாரிப்புகள் உற்பத்தியிலும், இந்த கிராமத்தின் வெற்றி, மற்றவர்களையும், தொழில் முனைவோராக மாற்றி வருகிறது.
இந்த கிராமத்தின் வெற்றி, இந்தியாவின் நிலையான விவசாய முறைகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும்.