பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோயிலில் வேண்டுதல் சீட்டில், முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என பக்தர் எழுதியுள்ள சீட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், மாசாணி அம்மன் பாதத்தில் வேண்டுதல் சீட்டு எழுதி வைத்து வணங்கி செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், மாசாணி அம்மன் கோயிலில் பக்தர் ஒருவர் எழுதி வைத்த வேண்டுதல் சீட்டு சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அதில், 13 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், பணி நிரந்தரம் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் குடும்ப செலவினங்களை செய்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட பக்தர் வேதனை தெரிவித்துள்ளார்.
குடும்ப செலவினங்களை இந்த ஊதியத்தை கொண்டு நடத்த இயலுமா என்பதை மாசாணி அம்மன் நினைத்து பார்க்க வேண்டும் என்றும், மாநில முதலமைச்சருக்கும், கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும் நல்ல புத்தி தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வேண்டுதல் குறித்து நல்ல தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் பக்தர் வேண்டுதல் சீட்டில் குறிப்பிட்டுள்ளார்.