தங்கள் நாட்டு மீன் வளங்களை அழிக்கும் இந்திய மீனவர்களை எல்லை தாண்ட விடமாட்டோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய – இலங்கை மக்கள் சங்கமிக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளையொட்டி இருநாட்டு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றதுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. திருவிழாவில் சுமார் 7 ஆயிரம் இந்திய – இலங்கை பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், கடற்படை, கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிப்பதால் மீன்வளம் முற்றிலும் அழிந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் தங்கள் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.