சேலம் அருகே விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் 21 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் டிப்ளமோ படித்துள்ள நிலையில், ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார்.
இவரின் செல்போன் எண்ணுக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பரில் விமான முன்பதிவு டிக்கெட் பணிக்கு பகுதி நேர வேலை இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை நம்பிய பூபதி, அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது எதிர்மறையில் இருந்த நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் பகுதிநேர வேலையை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, மர்மநபர் தெரிவித்த பல்வேறு வங்கி கணக்குகளில் பூபதி 21 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட மர்மநபர் தன்னுடைய தொடர்பை துண்டித்ததால், தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்த பூபதி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், புகார் தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில், வழக்கில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.