புதுச்சேரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் தந்தையே மகனையும் அவரது நண்பரையும் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி நைனார் மண்டபம் பகுதியை சேர்ந்த தினகரனும், ஃபெரோஸ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் ஃபெரோசின் செல்போனுக்குக் அவரது தந்தை சலீம் ராஜா மூலம் ஒரு வீடியோ வந்துள்ளது.
அதில், 2 கோடிக்கு பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதனை 30 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி ஆர்பிஐயில் மாற்றி கொடுத்தால் 30 சதவீதம் கமிஷன் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி ஃபெரோஸ் 15 லட்சம் ரூபாயும் அவரது நண்பர் 15 லட்சம் ரூபாயும் என 30 லட்சம் ரூபாயை சலீம் ராஜாவிடம் கொடுத்துள்ளனர்.
பணம் கொடுத்து ஒரு வருடமாகியும் முறையான பதில் கூறாததால், முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் தினகரன் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சலீம் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தனது மகன் மற்றும் அவரது நண்பரிடம் இருந்து பெற்ற 30 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சலீம் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.