ஈரோடு மாவட்டம் தேவர்மலை புட்டப்பனூர் கிராமத்தில் கடந்த 20 நாட்களாகத் தண்ணீர் கிடைக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் ஊராட்சி தேவர் மலை புட்டப்பனூர் தெருவில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராத காரணத்தால், ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் பொதுமக்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.
மேலும், இப்பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் பைப் லைன் போடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மின் இணைப்பும் நிலுவையில் இருந்ததால், சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் அண்மையில் செய்தி வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மின்மோட்டார் அமைத்து பொதுமக்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்தது.