மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகராஷ்டிரா சட்டப்பேரவையில் பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசினார். இதன் காரணமாக அவர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரது இந்த பேச்சின் எதிரொலியாக, சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அவுரங்கசீப்பின் சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாக்பூரிலும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது இரு பிரிவினரிடையே திடீரென மோதல் வெடித்தது. இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில், கல்வீச்சு தாக்குதல்களும் நடைபெற்றன.
கலவரத்தை கட்டுப்படுத்த உடனடியாக நூற்றுக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தபோதும் போலீசார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எனவே, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த கலவரம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், நாக்பூரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவுரங்சீப் சமாதிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், அமைதி சீர்குலையாமல் இருக்கும் வகையில் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.