நாக்பூரில் ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான சர்ச்சை வன்முறையாக வெடித்ததில் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயமடைந்தனர். இதற்கான பின்னணி என்ன? காரணம் என்ன? என்பது பற்றிப் பார்க்கலாம்.
கடைசி முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் 1658ம் ஆண்டு முதல் 1707ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். இந்து கோயில்களை அழிப்பது, இந்துக்களுக்குக் கொடுமைகள் செய்வது, இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற பெயரில், அதிக வரிகள் விதிப்பது உள்ளிட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தியதாகக் கூறப்படுகிறது.
ஔரங்கசீப்பின் கொள்கைகள் அடக்குமுறையானவை என்றும் நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்புக்கு முரணானவை என்றும், ஔரங்கசீப்பின் கல்லறை ஒடுக்குமுறையின் சின்னம் என்றும் பல காலமாகவே பல்வேறு அமைப்புக்களால் கூறப்பட்டு வருகின்றன.
அண்மையில், மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த புதல்வனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு chhaavaa என்ற இந்தி திரைப்படம் வெளியானது. இப்படத்தில், ஔரங்கசீப்பால் சிறைபிடிக்கப்பட்ட சம்பாஜி, கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக, சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அபு ஆஸ்மி, சத்ரபதி சாம்பாஜிக்கும் ஔரங்கசீப்புக்கும் இடையிலான போரை சித்தரிக்கும் சாவா திரைப்படத்தின் சில காட்சிகள் தவறானவை என்றும், ஔரங்கசீப் உண்மையில் ஒரு நல்ல நிர்வாகி என்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கூறி சர்ச்சையைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை சட்டமன்றத்தில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், மற்றும் பல இந்து அமைப்புக்கள், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.
சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான சதாரா நாடாளுமன்ற உறுப்பினர் உதயன்ராஜே போசலே, ஔரங்கசீப்பை ஒரு திருடன் என்று கூறியதோடு, கல்லறையை இடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நரேஷ் மாஸ்கே மக்களவையில் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
ஔரங்கசீப்பின் கல்லறையைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டியது துரதிர்ஷ்டவசமானது என்று கூறியுள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், முந்தைய காங்கிரஸ் அரசு கல்லறையை இந்தியத் தொல்பொருள் சங்கத்திடம் (ASI) ஒப்படைத்து விட்டதால், சட்டத்தின் மூலம் கல்லறையை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றுவோம் என தெரிவித்தும் மாநில அரசிடம் மனு அளித்தனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஒளரங்கசீப்பின் புகைப்படத்தையும் எரித்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இஸ்லாமிய மதநூலை எரிப்பதாக வதந்தி காட்டுத்தீ போல பரவியதும், ஆர்ப்பாட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதும், வன்முறை வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள், நாக்பூரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் மாறாக வெளியூரில் இருந்து வந்தவர்கள் என்று, மகாராஷ்டிரா சிறுபான்மை ஆணையத் தலைவர் பியாரே கான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, நாக்பூர் நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாக்பூர் காவல்துறை ஆணையர் ரவீந்தர் குமார் சிங்கால் பிறப்பித்த உத்தரவின்படி, கட்டுப்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
வதந்திகளுக்கு ஏமாறாமல் அமைதியை காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.
நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினரும்,மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, சில வதந்திகள் காரணமாகவே வன்முறை மற்றும் மத பதற்றம் நிலவுவதாகக் கூறியுள்ளார். மேலும், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.
ஔரங்கசீப்பின் கல்லறை தொடர்பான சர்ச்சைகள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. 1980களின் பிற்பகுதியில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே ஔரங்கபாத்தை, சம்பாஜி நகர் என்று பெயர் மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 2022ம் ஆண்டு, தனது ஆட்சிக்காலத்தில், ஔரங்கபாத்தை சம்பாஜி நகர் என்று ஏக்நாத் ஷிண்டே பெயர் மாற்றினார்.
ஏற்கெனவே, 2022 ஆம் ஆண்டு மே மாதம் IMIM கட்சியின் தலைவர் ஒவைசி, ஔரங்கசீப்பின் கல்லறைக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போதே ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, கல்லறையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.