சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பாஜக – காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாநகராட்சி மேயர் சங்கீதா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. தீர்மானம் குறித்தான விவாதம் நடைபெற்று வந்தபோது குறுக்கிட்ட பாஜக மாமன்ற உறுப்பினர் குமரிபாஸ்கர், மாமன்ற கூட்டத்தில் தொடர்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு மேயர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி கையில் பதாகையுடன் முழக்கம் எழுப்பினார்.
அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் அதற்கு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டதாக கூறி பதாகையை பிடுங்கி எறிந்தார். இதனால் இருவருக்குமிடையே மோதல் போக்கு நிலவியது.
தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் கூறி திமுக மாமன்ற உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மாமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்த பின் வெளியே வந்த பாஜக உறுப்பினர் குமரி பாஸ்கரை காங்கிரஸ் உறுப்பினர்கள் சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்க முயன்ற நிலையில், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்