ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே காரில் வந்த கணவன் மனைவியை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த ரவுடி ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தனது மனைவி ஆதிராவுடன் திருப்பூர் நோக்கி காரில் சென்றுள்ளார். சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது அவர்களது காரை மறித்த சிலர், இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த ஆதிரா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பச்சப்பாளி அருகே சதீஷ், சரவணன், பூபாலன் ஆகிய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவலர் யோகராஜ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே ரவுடி ஜானை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.