சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாகத் தங்கியிருந்த இந்திய வம்சாவளியினரான நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும், பூமிக்குப் பத்திரமாகத் திரும்பியுள்ளனர். இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் தங்கியிருந்த காலத்திற்கு என்ன சம்பளம் வாங்குவார் என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
கடந்த ஜூன் 5ம் தேதி, நாசா விஞ்ஞானிகளான சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் சர்வ தேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 8 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால்,எதிர்பாராத விதமாக, ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக, பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் சர்வ தேச விண்வெளி நிலையத்திலேயே இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலத்தின் மூலம், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பினர். சுமார் 9 மாதங்கள் 13 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளிவீரர்கள், 4576 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளனர். சொல்லப்போனால் 19.5 கோடி கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS 01 முதல் GS 15 வரையிலான தர வரிசையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் GS 15 தர ஊதியம் என்பது மிக அதிகமான சம்பளமாகும்.
நாசாவில் GS 12 முதல் GS 15 வரையிலான தரவரிசைகளில் விண்வெளி வீரர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் ஊதியம், அவர்களின் அனுபவம் மற்றும் தரவரிசையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், GS 13 பிரிவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 70 லட்சம் முதல் 92 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. GS 14 பிரிவில் ஆண்டுக்கு 83 லட்சம் முதல் ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. GS 15 பிரிவில், ஆண்டுக்கு 98 லட்சம் முதல் ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் வரை ஊதியம் வழங்கப் படுகிறது. இதன்படி பார்த்தால், சுனிதா வில்லியம்ஸின் ஆண்டு வருமானம், 1.08 கோடி முதல் 1.41 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 287 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்த சுனிதா வில்லியம்ஸுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப் பட்டுள்ளது. அதாவது, ஒருநாளுக்கு 4 டாலர்கள் என்ற கணக்கில், மொத்தம் 1148 டாலர்கள் வழங்கப் பட்டுள்ளது. இந்த பண மதிப்பில், சுமார் 1 லட்சம் ரூபாயாகும். மேலும், சுனிதா வில்லியம்ஸின் சொத்து மதிப்பு சுமார் 5 மில்லியன் டாலர்கள் ஆகும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.