சென்னை மதுரவாயலில் தனியார் கல்லூரியின் அலட்சியத்தால் மூன்று மாணவ மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம் பட்டு பகுதியில் சுவாமி விவேகானந்தா என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் கடந்த 2020-2023 ஆம் ஆண்டில் B.Sc(Viscom) பிரிவில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா கோவூர் பகுதியைச் சேர்ந்த வருண் பாண்டியன் போரூர் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்தர் என மொத்தம் மூன்று பேர் மட்டுமே படித்து வந்திருக்கின்றனர்.
இவர்களிடம் ஆண்டுக்கு ஒரு லட்சம் விதம் 3 லட்சம் கட்டணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் முழு மதிப்பு சான்றிதழ் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்துள்ளது.
இந்த நிலையில் ஸ்வேதா என்ற மாணவி விவேகானந்தா கல்லூரியில் கொடுக்கப்பட்ட ஐந்து செமஸ்டர் மார்க் சீட்டை வைத்து கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக பயின்று வந்துள்ளார். மேலும் இரண்டு மாணவர்களும் கல்லூரி சேர முடியாமல் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் மாணவி பயின்று வரும் கல்லூரியில் முழு மதிப்பு சான்றிதழை ஒரு ஆண்டுகளாக கேட்டு வந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் நேரடியாக மெட்ராஸ் யூனிவர்சிட்டிக்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டபோது அவர்கள் என் எம் இ என்ற தேர்வு ஒன்று எழுதாமல் விடுபட்டு இருப்பதாகவும் அதனை எழுதினால் தான் சான்றிதழ் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கான ஆன்லைன் விண்ணப்பிக்கும் காலமும் முடிந்து விட்டது என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்து இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து கல்லூரியில் சென்று கேட்டபோது அலட்சியமாக தேர்வு ஒன்று உள்ளதாகவும், அதனை எழுதினால் முழு மதிப்பு சான்றிதழ் கிடைக்கும் எனறும் விரைந்து தேர்வு எழுத தயாராகும்படி கூறியுள்ளனர்.
மேலும் NME என்ற தேர்வு ஒன்று இருப்பது கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாததும், அந்த தேர்வு தொடர்பாக இதுவரை ஹால் டிக்கெட் கூட ஏதும் கொடுக்காமல் தற்போது அதற்கான தேர்வை எழுத கூறியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இது குறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர்..