சோழவந்தான் அருகே குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகப் பட்டியலின மக்கள் வீடியோ வெளியிட்டு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவடகம் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொது கழிப்பறை கோரி நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், திருவடகம் ஊராட்சியில் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதாகவும், இதனால் யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறையில் எழுதப்பட்ட எழுத்துகள் ஊராட்சி நிர்வாகத்தின் தவற்றை மறைப்பதற்காக தற்போது மறைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.