கடலூர் மாவட்டம் மலையடிக்குப்பதில் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்து முந்திரிக் கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளகரை ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், கொடுக்கம்பாளையம், பெத்தாங்குப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக முந்திரி விவசாயம் நடந்து வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள முந்திரி மரங்களை அழித்து, அந்த நிலத்தை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அங்குத் தோல் தொழிற்சாலை அமைய உள்ளதாக அப்பகுதி மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், முந்திரி மரங்களை அகற்றிய அதே பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முந்திரி மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போது அவர்களை, கடலூர் மாவட்ட கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அதே இடத்தில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.