அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் அனைத்தையும் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன் விசாரணையில் ஆஜரான மனுதாரர் தரப்பில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனர், நடத்துனர், அலுவலக உதவியாளர் என வெவ்வேறு பதவிகளுக்குப் பணம் பெற்றது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைச் சேர்த்து விசாரித்தால், வழக்கு விசாரணை முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஓட்டுனர் பணிக்குப் பணம் பெற்ற வழக்கு, நடத்துனர் பணிக்குப் பணம் பெற்ற வழக்கு என ஒவ்வொரு பணியிடங்களுக்கும் தனித்தனியாக வழக்குகளை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், வழக்கின் குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை என்றும், வழக்குகளைச் சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு எனவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர் கேட்கவில்லை என்றும், வழக்குகளை தனித்தனியாக விசாரித்தால் விசாரணை தாமதமாகும் என்பதால், சேர்த்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரிதான் எனவும் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.