கடப்பாரையுடன் வீடுகளில் வரி வசூலுக்குச் செல்லும் கடலூர் மாநகராட்சி ஊழியர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சியாகக் கடலூர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் நிதி சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வரி பாக்கியை வசூலிப்பதில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பை கடப்பாரையுடன் சென்று மாநகராட்சி ஊழியர்கள் துண்டிப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறிய அளவில் வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு அவகாசம் வழங்காமல் மிரட்டுவதாகவும், பல லட்சம் ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பவர்களை எதுவும் கேட்பதில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.