தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி உரிமையாளர்களுடன் வரும் 25-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒப்பந்தக் கூலியைக் குறைக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 19-ம் தேதி முதல் திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி கூடங்கள் இயங்காதால் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.
இந்நிலையில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் வரும் 25-ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தக் கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவது குறித்து 26-ம் தேதி முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர்.