வேங்கை வயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, தன்னை மீண்டும் பணியாற்ற அனுமதிக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வந்தது.
அதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், காவலர் முரளி ராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முரளி ராஜா, கடந்த ஜனவரி 20-ம் தேதி முதல் காவலர் பணிக்கு செல்லவில்லை எனத் தெரிகிறது.
எவ்வித காரணமும் கூறாமல் 25 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத நிலையில், அவரை விட்டோடி என மாவட்ட காவல்துறை அறிவித்தது.
இந்த நிலையில், முரளி ராஜா மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தாவை நேரில் சந்தித்து பணிக்கு வராதது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், தன்னை மீண்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி மனு அளித்தார்.