வங்கதேசத்தில் அடக்குமுறைக்கு ஆளான இந்துக்களைப் பாதுகாக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூரு சன்னேன்ஹள்ளியில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். கூட்டத்தில் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்குக் கவலை தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த விவகாரத்தைப் பாரத அரசு வங்கதேச இடைக்கால அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைச் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதேசமயம், அங்குள்ள இந்துக்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நலனை உறுதிசெய்ய வேண்டுமென ஆர்எஸ்எஸ் வலியுறுத்தியது.
வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கடமை என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.