தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியில் செல்லாமல் குடியிருப்புகளுக்குள் முடங்கினர்.
இதேபோல் கோவில்பட்டி நகர்ப் பகுதியிலும் ஒருமணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களாக அங்கு வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாகச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் நீண்ட நாட்களுக்குப் பின் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.