மேட்டுப்பாளையம். ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இதேபோல், பலத்த காற்று காரணமாக மேட்டுப்பாளையம் – அன்னூர் சாலையில் உள்ள டேங்மேடு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அத்துடன் கெண்டையூர் – ராமக்கவுண்டன் புதூர் சாலையில் மின் கம்பம் சாய்ந்தது. இதையடுத்து அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தி மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. ஜிஆர்டி சர்க்கிள் ரயில்வே நிலையம் அருகே உள்ள பாலம், ஒசூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.