புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அன்னவாசல் ஸ்ரீ தர்மசம் வர்த்தினி, ஸ்ரீ விருத்த புரிஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை வீரர்கள் போட்டிப் போட்டு அடக்கினர்.
இந்நிலையில் கலெக்ஷன் பாய்ண்ட் பகுதியில் இருந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளரை மாடு ஒன்று முட்டியது. இதனையடுத்து அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அன்னவாசல் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.