நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள பெண்ணின் உறவினரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் கடந்த 18ம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீடு திரும்பிய போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் கார்த்திக், அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷா தலைமறைவாக உள்ள நிலையில், அவர் யாருடைய உதவியுடன் மறைந்துள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்றத்தில் சில காலங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட நூர்நிஷாவிற்கு அடைக்கலம் அளித்திருக்கக்கூடிய நபர்களை காவல்துறை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக உள்ள நூர்நிஷாவின் இருப்பிடத்தைக் கண்டறிய, அவருடைய உறவினர்களிடம், குறிப்பாக அவரது சகோதரர் பீர் முகமது உள்ளிட்ட குடும்பத்தினரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இந்த கொலை வழக்கில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, தேவையானால் முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்களும் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.