நாமக்கல்லில் வழித்தட பிரச்சினையால் வருவாய்த்துறை ஆய்வாளரின் கணவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை நடத்தி வருகின்றார்.
இவரது மனைவி சாலா, நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். கடந்த 3 ஆண்டுகளாகக் காமராஜர் நகரில் ரவிக்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இதேபோல அதேபகுதியில் லாரி தொழில் செய்து வரும் நாமக்கல் திமுக எம்.எல்.ஏ ராமலிங்கத்தின் உறவினரான அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இரு குடும்பத்தினர் இடையே வழித்தட பிரச்சினை இருந்து வரும் நிலையில் அது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் பிரச்சனை முற்றி ரவிக்குமாரை, அருண்குமார் மற்றும் அவரது மகன்கள் தாக்கியுள்ளனர். தடுக்க சென்ற ரவிக்குமாரின் மனைவி சாலாவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த பாதிக்கப்பட்ட ரவிக்குமார் கூறுகையில், திமுக எம்.எல்.ஏ.ராமலிங்கத்தின் அழுத்தம் இருப்பதால், காவல்துறை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.