அண்டை மாநில முதல்வர்களோடு உள்ள நட்பைப் பயன்படுத்தி, தமிழகத்திற்கான நதிநீரைப் பெற முயற்சிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்டை மாநில முதல்வர்களுடன் உள்ள நட்பைப் பயன்படுத்தி தமிழகத்திற்கான நதிநீரைப் பெற முயற்சிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீங்கள் முதல்வராக இருந்த போது அண்டை மாநில முதல்வர்கள் விரோதியாக இருந்தார்களா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக இருந்த போது கேரளாவிற்கு நேரடியாகச் சென்று பேசியதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், அண்டை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை என்பதால் தான், நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சென்றுள்ளதாகவும் கூறினார்.
மேலும் தமிழகத்தின் சம்மதமில்லாமல் மேகதாது அணை விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
நதிநீர் விவகாரத்தில் மட்டும் காவிரி தொடர்பாக 9 வழக்குகளும், முல்லைப் பெரியாறு தொடர்பாக 9 வழக்குகளும் என மொத்தமாக 22 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதாகத் தெரிவித்த துரைமுருகன், அதற்காக மட்டும் எத்தனை கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.