கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கு 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இரு ஒப்பந்தங்களையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும், கச்சத்தீவு மீண்டும் இந்தியாவின் அங்கமாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2009ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், வழக்கு விசாரணை தாமதமானதால், விரைந்து விசாரிக்கக் கோரி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், 2011ல் முதலமைச்சராக பதவியேற்றதும் கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த அனைத்து தகவல்களையும் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த்துறையும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
கச்சத்தீவை மீட்கக் கோரிய வழக்கு கடைசியாக 2020ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.