தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நெல்லை டிஐஜியாக இருந்த மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜி-யாகவும், ராமநாதபுரம் டிஐஜியாக இருந்த அபினவ் குமார், மதுரை டிஐஜியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜவஹர், சென்னை சிபிசிஐடி காவல்துறை வடக்கு மண்டல எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக ஈரோடு மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராகச் சுஜாதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு கூடுதலாக நெல்லை சரக டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக இருந்த சக்திவேல், சென்னை மாநகர காவல் உளவுப் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக வண்ணாரப்பேட்டை காவல்துறை துணை ஆணையராக பாஸ்கரன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த ஹரிகிரண் பிரசாத், சென்னை காவல்துறை நலப்பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக மயிலாப்பூர் துணை ஆணையராக வி. கார்த்திக்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் சென்னை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் போக்குவரத்துத் துறை துணை ஆணையராக மேகலினா ஐடனை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், காவல்துறை உயர்அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.