ஏமன் போரில் பயன்படுத்தவேண்டிய வியூகங்கள் பற்றி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சமூக வலைத்தள உரையாடல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிகாரிகள் குழுவில் தவறுதலாக, பத்திரிகையாளர் ஒருவரும் இணைக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஒருநாடு மற்றொரு நாடு மீது போர் தொடுக்கும் போது ஆயுதங்களை விட முக்கியமானவை வியூகங்களே. மன்னர் காலத்தில் இருந்தே தங்களின் போர் வியூகங்களை எல்லா நாடுகளும் ரகசியமாக வைத்திருக்கும். இது தான். அவ்வளவு முக்கியமான ஒன்றை, தங்களது அலட்சியத்தால் கோட்டை விட்டிருக்கிறார்கள் அமெரிக்க அதிகாரிகள்.
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஈரானின் ஆதரவு பெற்ற இந்த கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக, செங்கடலில் செல்லும் இராணுவம் மற்றும் வணிக கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து ஏமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தவகையில், கடந்த மார்ச் 15 ஆம் தேதி மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பான தகவல்கள், தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் Jeffrey Goldberg தெரிவித்துள்ளார். எப்படி ஏமன் மீதான தாக்குதல் பற்றிய இராணுவ ரகசியம் கசிந்தது என்பது தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களுக்குள் அதிமுக்கிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள சிக்னல் என்னும் மெசேஜிங் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த குழுவில், துணை அதிபர் ஜேடி வான்ஸ், வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, CIA இயக்குனர் ஜான் ரட்ச்லிப்பே உளவுத் துறை துளசி கப்பார்டு ,வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சுசி வைல்ச் உள்ளிட்ட 18 பேர் இடம் பெற்றிருந்தனர். SM என்ற பெயரில் ட்ரம்பும் இந்த குழுவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், தவறுதலாக, அட்லாண்டிக் பத்திரிகையின் ஆசிரியர் Jeffrey Goldberg ம் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆயுதங்கள் குவிப்பு, எங்குத் தாக்குதல் நடத்தவேண்டும், போன்ற போர் வியூகங்கள், தாக்குதல் நடப்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக தனக்குத் தெரியும் என்று Jeffrey Goldberg கூறியுள்ளார்.
இந்நிலையில், தவறுதலாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ள பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் Brian Hughes,பிரைன் ஹுக்ஸ், எந்த போர்த் திட்டங்களும் குழுவில் விவாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும், வெளிநபர் ஒருவர் இந்த குழுவில் இணைக்கப்பட்டது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, Jeffrey Goldbergயை இந்த குழுவில் சேர்த்ததாகக் கூறப்படும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் இப்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப், அட்லாண்டிக் இதழைத் தான் படிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மீறல் என்று குற்றம் சாட்டியுள்ள ஜனநாயக கட்சியினர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி விவாதிக்க சிக்னல் போன்ற செயலியைப் பயன்படுத்துவது தேசியப் பாதுகாப்புக்கு அதிர்ச்சியூட்டும் ஆபத்தாக முடியலாம் என்றும் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.