சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக 37 மாவட்டங்களில் 738 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை சீமைக்கருவேல மரங்களை அகற்ற 2 கோடியே 37 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசு பணம் செலவிடுவது குறித்து வேதனை தெரிவித்த நீதிபதிகள்,
இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைத்தால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பொது ஏலம் விடும்படி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், பதிலளிக்க அரசு தவறும் பட்சத்தில் பொது ஏல அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட நேரிடும் எனவும்,
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.